/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த கோரிக்கை
/
வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 01:18 AM
ப.வேலுார், பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம்,சோழசிராமணி, அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் வாங்கி சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில், சனி, புதன் கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.
ப.வேலுார் அருகே பிலிக்கல்பாளையத்தில், 13 தனியார் ஏல மண்டிகள் உள்ளன. இங்கு, குறிப்பிட்ட சில நபர்களே, வெல்லத்துக்கு விலை நிர்ணயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம் நடத்துவது போல், வெல்லத்தையும் ஏலம் விட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், தனியார் ஏல மண்டிகள், 'சிண்டிகேட்'அமைத்து விலை நிர்ணயம் செய்வதை கட்டுப்படுத்த முடியும்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
ப.வேலுார் தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. ஏதாவது ஒரு நாளில் வெல்லம் ஏலம் நடத்த வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது ஏல மண்டியில், வெல்லம் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால், வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ, 60 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளை விட, கமிஷன் ஏஜன்ட்களும், புரோக்கர்களும் அதிகளவில் லாபம் ஈட்டுகின்றனர். இதனால்,வெல்லம் விவசாயிகளுக்கு சொற்ப லாபமே கிடைக்கிறது. எனவே, தேசிய வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.