ADDED : டிச 04, 2025 05:59 AM
ப.வேலுார்: மோகனுார் அடுத்த ஒருவந்துாரில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு, வலையப்பட்டி சாலை, செவிட்டுரங்கம்பட்டியில் உள்ள அரசு மணல் கிடங்கில் சேமித்து வைத்து, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது.
இங்கு முறைகேடு நடந்ததால், 2023 செப்., 12 முதல் மணல் குவாரி செயல்படாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'எம்-சாண்ட்' மணல் ஒரு யூனிட், 6,000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. எம்-சாண்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும்போது, தரம் குறைவாக இருப்பதால் வீடு கட்டுவோர், ஆற்று மணலையே அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆற்று மணல், ஒரு யூனிட், 12,000 ரூபாய் முதல், 14,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மணல் குவாரியை திறந்தால், மணல் விலை பாதியாக குறையும். தற்போது, நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே நன்செய் இடையாற்றில் புதிதாக மணல் குவாரி திறக்க அரசு முடிவு செய்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடைந்தன. மணல் குவாரி, கடந்த மாதம் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மேலும் மணல் குவாரி திறக்கப்படுவது தள்ளிப்போவதால் பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

