/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணிக்க முடிவு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தர்ணா
/
எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணிக்க முடிவு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தர்ணா
எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணிக்க முடிவு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தர்ணா
எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணிக்க முடிவு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தர்ணா
ADDED : நவ 18, 2025 02:01 AM
நாமக்கல், எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணிக்க போவதாக, நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகாந்த், லட்சுமி நரசிம்மன், பாலசுப்பரமணி, செங்கமலை, இளங்கோ ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பினர் கூறியதாவது:கடந்த, 4ல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியால் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மிகுந்த பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். விடுமுறை நாட்களிலும் ஓய்வின்றி பணியாற்றும் சூழல் உள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அப்போது, அதில் உள்ள குறைபாடுகளையும், ஆய்வு கூட்டங்கள் என்ற பெயரில் அலுவலர்களை நெருக்கடிக்கு அதிகாரிகள் ஆளாக்குவதையும் கைவிட வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நெருக்கடியான சூழலே நீடிக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு செல்லும் பலர் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும். போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெருந்திரள் முறையீடு போராட்டத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் நடத்த வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று போராட்டம் நடந்தது. இன்று முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட அனைத்து தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தர்ணா போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

