/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் தவிப்பு
/
சாலையில் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூன் 16, 2025 07:30 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிப்பட்டியில் இருந்து அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல கிராமத்து சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்., மற்றும் நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துக்கு விரைவாக செல்ல முடியும். இந்நிலையில் சாலையின் ஒரு பகுதியில், விவசாயி ஒருவர் பள்ளம் தோண்டியதுடன் கல், தென்னை மட்டைகளை வைத்து ஆக்கிரமிக்க தொடங்கினார்.
இந்நிலையில், இவ்வழியாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு வந்த கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோரை பாதிக்கப்பட்ட இடத்திலேயே நிறுத்தி, தங்களது புகார் மனுவை அளித்தனர். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, உடனடியாக சாலையில் இருந்த பள்ளத்திற்கு மண் கொட்டி சரி செய்ததுடன் கல், தென்னை மட்டைகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சரி செய்தனர்.ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் அப்பகுதியை சேர்ந்த விவசாயி, பழையபடியே கல், தென்னை மட்டை, மரங்களை வைத்து ஆக்கிரமித்துள்ளார். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, மீண்டும் கலெக்டர் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.