/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தரம் குறைந்த 'இ-பைக்' விற்பனை; ரூ.13.65 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
/
தரம் குறைந்த 'இ-பைக்' விற்பனை; ரூ.13.65 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
தரம் குறைந்த 'இ-பைக்' விற்பனை; ரூ.13.65 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
தரம் குறைந்த 'இ-பைக்' விற்பனை; ரூ.13.65 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : அக் 16, 2024 07:25 AM
நாமக்கல்: 'தரம் குறைந்த பேட்டரியுடன், 'இ--பைக்' விற்பனை செய்த நிறுவனம், ஏழு வாடிக்கையாளர்களுக்கு, 13.65 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல், இ.பி., காலனியை சேர்ந்த தாரணி, 25; நல்லிபாளையம் கமலா, 36; சுமதி, 45; குமரிபாளையம் ராமநாதன், 57; வடுகப்பட்டி பிரசாந்த், 26; காளப்பநாயக்கன்பட்டி பிரபாகரன், 47; தெற்கு திருமலைகிரி கோகுல்ராஜ், 34 ஆகியோர், 2022ல், நாமக்கல் - பரமத்தி சாலையில் ராயல் இ.வி., பைக்ஸ் நிறுவனத்தில், பேட்டரி 'இ-பைக்' வாங்கினர். ஐதராபாத் நிறுவன தயாரிப்பை, அவர்களுக்கு விற்பனை செய்துள்ளது. வாகன பேட்டரிகளுக்கு, மூன்றாண்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில மாதங்களில் பேட்டரி செயலிழந்து, வாகனத்தை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. நாமக்கல் டீலரிடம் வாடிக்கையாளர் ஏழு பேரும் புகாரளித்தனர். ஆனால், பேட்டரிகளை மாற்றி தரவில்லை. இதனால் வாடிக்கையாளர் ஏழு பேரும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 'இ--பைக்' தயாரித்த நிறுவனம், விற்பனை செய்த டீலர் மீது, தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் நேற்று தீர்ப்பளித்தனர்.
உற்பத்தி குறைபாடுள்ள பேட்டரிகளை விற்பனை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களான தாரணிக்கு, 80,000, பிரசாந்த்க்கு, 84,000, கோகுல்ராஜிற்கு, 89,000, ராமநாதனுக்கு, 87,000, பிரபாகரனுக்கு, 84,000, சுமதிக்கு, 87,000, கமலாவிற்கு, 84,000 ரூபாயை திருப்பி வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் சிரமங்களுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகையாக, தலா, 10,000 ரூபாய் என, 13 லட்சத்து, 65,000 ரூபாய் இழப்பீடாக வழங்க, வாகனத்தை தயாரித்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.