/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொந்த வாகனம் வாடகைக்கு பயன்படுத்தியதால் பறிமுதல்
/
சொந்த வாகனம் வாடகைக்கு பயன்படுத்தியதால் பறிமுதல்
ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், சொந்த வாகனங்களை வாடகை வாகனமாக பயன்படுத்துவதாக, கலெக்டர் உமாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர், கீரம்பூர் சுங்கச்சாவடியில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துாரில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு, நாமக்கல் நோக்கி வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். சோதனையில், சொந்த வாகனம் என்பதும், வாடகை வாகனமாக இயக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காரை பறிமுதல் செய்து, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். 'சொந்த வாகனங்களை, வாடகை வாகனமாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்தனர்.