/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 27, 2025 12:42 AM
நாமக்கல், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 'சமவேலைக்கு சம ஊதியம்' வலியுறுத்தி, ஒருநாள் உண்ணாவிரத போராட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ்தென்றல் இசைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரவி வரவேற்றார். 2009 ஜூன், 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் அதிகமாகவும், அதற்குபின் நியமிக்கப்பட்டவர்களுக்கு குறைவாகவும் வழங்கப்படுகிறது. ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரி இருந்தபோதும், ஒரே விதமான ஊதியம் வழங்காமல், மாறுபட்டு வழங்குகின்றனர். அதனால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.