ADDED : ஜூலை 14, 2025 04:00 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ராமநாதபுரம் புதுார், ராயக்கோட்டை, கருவாட்டாறு, ஜூஸ் பேக்டரி, வெண்டாங்கி, வாழவந்தி கோம்பை, காரவள்ளி மற்றும் நடுக்கோம்பை பகுதியில் பரவலாக அரளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பூக்களை சேலம், நாமக்கல், ஆத்துார் போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைக்கின்றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதாலும், பூக்கள் பெரியதாக மற்றும் வாசனை அதிகமாக இருக்கும் காரணத்தால் வியாபாரிகள் நேரடியாக
விவசாய தோட்டங்களுக்கு சென்று வாங்கி செல்கின்றனர். சில வாரங்களுக்கு முன், சந்தையில் ஒரு கிலோ அரளி பூவின் விலை, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரளி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.