/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனை
/
துப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனை
ADDED : ஜன 06, 2024 01:05 PM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் காட்டூரில் கே.பி.எம்., மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் விஷ்ணு பிரியன். இவர், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.
இதையடுத்து மத்திய பிரதேசத்தில், 67வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் விஷ்ணு பிரியன் கலந்து கொண்டார். இதில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் விஷ்ணுபிரியன் மூன்றாம் இடம் பிடித்தார். மாணவன் மற்றும் பயிற்சியாளரை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், நிர்வாகம் சார்பில் அனைவரும் பாராட்டினர்.
மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பெரியகரசபாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம், இன்று நடக்கிறது. இன்று, நாளை மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது.காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் செந்தில் முத்து இலவசமாக பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
பள்ளிப்பாளையத்தில் ஜோதிடர் திருவிழா
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் கல்வி மையம் சார்பில் ஆறுபடை ஜோதிட திருவிழா, பள்ளிப்பாளையம் அருகே, ஜீவா செட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று ஆராய்ச்சி அறிவகம் நிறுவனர் தலைவர் முகுந்தன் முரளி தலைமையில் துவக்கப்பட்டது.நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் இருந்து ஜோதிடர்கள், பஞ்சாங்கம் மற்றும் வாஸ்து, பரிகாரம் உள்ளிட்ட பல நிபுணர்கள் என, 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் பேசினர். இன்று, நாளை என, இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், தலைச்சிறந்த ஜோதிடர்கள் கலந்துகொண்டு, பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். மேலும், புதிய நுால்கள் வெளியிடப்படுகின்றன.
மரவள்ளி விலை சரிவு
ப.வேலுார்: தேவை குறைந்ததால், மரவள்ளிக்கிழங்கு விலை சரிந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம், மரவள்ளிக்கிழங்கு டன், 11,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 500 ரூபாய் வரை குறைந்து, 10,500 ரூபாய்க்கு விற்கிறது. 'சிப்ஸ்' மரவள்ளிக்கிழங்கு டன், 12,500 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் வரை குறைந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.