/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் சோலார் மேளா
/
சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் சோலார் மேளா
ADDED : அக் 17, 2025 02:11 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ், சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் மின்வாரியம் ஒருங்கிணைந்து சோலார் மேளா நிகழ்ச்சி நடத்தியது. எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி மேளாவை தொடங்கி வைத்து பேசினார்.
பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை சோலார் அமைப்பதன் மூலம், மின்சார செலவை குறைக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சோலார் அமைப்புக்கு, 78 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. 95 சதவீதம் மின் கட்டணத்தை சேமிக்கலாம். 1 கிலோ வாட் திறன் கொண்ட அமைப்புக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரையும், 2 கிலோ வாட் திறன் கொண்ட அமைப்புக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரையும், 3 கிலோ வாட் அல்லது அதற்கு மேல், 78,000 ரூபாய் வரையும் அரசு மானியம் கிடைக்கும். பணிகள் முடிவடைந்தவுடன் அரசின் மானிய தொகை நேரடியாக வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.
சோலார் மின் தகட்டின் ஆயுட் காலம் 27 முதல் 30 ஆண்டுகளாகும். சூரிய தகடுகள் நிறுவும் செலவில், 40 முதல் 60 சதவீதம் வரை மத்திய அரசு சலுகை வழங்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, 1,000 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை உபயோகிப்பவர்கள் சோலார் திட்டத்தில் இணைந்தவுடன், 2 மாதத்தில் 700 யூனிட் வரை உற்பத்தி செய்து பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.
துணை மேயர் பூபதி, மேற்பார்வை பொறியாளர் (நாமக்கல் மின்பகிர்மான வட்டம்) சபாநாயகம், தலைமை பொறியாளர் (கரூர் மண்டலம்) அசோக்குமார், செயற்பொறியாளர் சுந்தரராஜன் உட்பட சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.