ADDED : ஜூன் 04, 2024 04:10 AM
விநாயகர் கோவில்
கட்ட பூமி பூஜை
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில் முத்துக்குமார சுவாமி, பூபதி மாரியம்மன் கோவில் அருகே புதிதாக விநாயகர் கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடந்தது. இந்த பூமி பூஜையில் ஊர் பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூமி பூஜைக்கான ஏற்பட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராசிபுரத்தில் மழை
ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:30 மணியளவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ராசிபுரம், புதுப்பாளையம், காக்காவேரி, சீராப்பள்ளி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரம் மழை பெய்தது. தொடர்ந்து பல இடங்களில் விட்டு விட்டு துாறல் மழை பெய்தது. இரவு, 9:00 மணி வரை துாறல் மழை தொடர்ந்து இருந்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
மது விற்ற 3 பேர் கைது
குமாரபாளையம், ஜூன் 4-
குமாரபாளையத்தில், சட்டத்துக்கு விரோதமாக அரசு மது பானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பள்ளிப்பாளையம் சாலை, கோட்டைமேடு, ராஜம் தியேட்டர் அருகே உள்ளிட்ட இடங்களில், அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த ராஜா, 52, முருகன், 40, சேகர், 32, ஆகிய மூவரை கைது செய்து, 160 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான செல்வகுமார், ஜான் பீட்டர் ஆகிய இருவரை தேடிவருகின்றனர்.
தொடர் மழை எதிரொலி
பந்தல் காய்கறி விலை உயர்வு
ராசிபுரம்-
தொடர் மழை காரணமாக, ராசிபுரம் உழவர் சந்தையில் பந்தல் காய்கறிகளான புடலை, பாகல், பீர்க்கங்காய் விலை உயர்ந்துள்ளது. கிலோ, 40 ரூபாய்க்கு விற்ற பீர்க்கங்காய், நேற்று, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளும், 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நேற்று புடலை, 50, பீர்க்கன், 70, பாகற்காய், 70, அவரை, 120, தக்காளி, 38, கத்தரி, 45, வெண்டை, 50 சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 36 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 190 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 14,750 கிலோ காய்கறி, 5,120 கிலோ பழங்கள், 180 கிலோ பூக்கள் என மொத்தம், 20,050 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 9 லட்சத்து, 5,975 ரூபாய் ஆகும். 4,020 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.