/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தை முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
தை முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
தை முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
தை முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஜன 20, 2025 07:00 AM
நாமக்கல்: தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டை பகுதியில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுவாமி வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும், கட்டளைதாரர்கள் மூலம், காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
அதேபோல், ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சார்பில் பொது அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. அதன்படி, தை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை, 9:00 மணிக்கு, 1,008 வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1,008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கனகாபிஷேகத்துடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர் விடுமுறையால், வழக்கத்தை விட நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான பக்தர்கள் கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.