/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில வினாடி - வினா போட்டி நாமக்கல்லில் 21ல் முதல்நிலை எழுத்துத்தேர்வு
/
மாநில வினாடி - வினா போட்டி நாமக்கல்லில் 21ல் முதல்நிலை எழுத்துத்தேர்வு
மாநில வினாடி - வினா போட்டி நாமக்கல்லில் 21ல் முதல்நிலை எழுத்துத்தேர்வு
மாநில வினாடி - வினா போட்டி நாமக்கல்லில் 21ல் முதல்நிலை எழுத்துத்தேர்வு
ADDED : டிச 19, 2024 01:25 AM
நாமக்கல், டிச. 19-
'தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாநில வினாடி - வினா போட்டிக்கு, வரும், 21ல், மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி - வினா போட்டி, விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடக்கிறது. அதில், சிறந்த மதிப்பெண் பெறும், 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, மூன்று குழுக்களாக இணைத்து, இறுதிப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இறுதிப்போட்டி, வரும், 28ல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் அணிக்கு முறையே, இரண்டு லட்சம் ரூபாய், 1.50 லட்சம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் என, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். மேலும், இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து குழுக்களுக்கும் ஊக்கப்பரிசாக, 25,000 ரூபாய் வீதம் வழங்கப்படும். வரும், 21ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மதியம், 2:00 முதல், 3:00 மணி வரை முதல்நிலை எழுத்துத்தேர்வு நடக்கிறது.
அதில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை, அனைத்து நிலை அலுவலர்கள், அரசு, அரசு உதவிபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று மாலை, 5:00 மணிக்குள், 'தமிழ் வளர்ச்சித் துறையின், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் பாரதியை, 9487776832' என்ற மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

