ADDED : நவ 19, 2025 02:13 AM
எருமப்பட்டி,அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பணியாற்றி அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இந்தாண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டி, காளப்பநாய்க்கன்பட்டி அரசு பள்ளியில் நடந்தது. இதில், மாவட்டத்தில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவகனி, பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றார். அந்த மாணவரை, தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ராதிகா, தமிழாசிரியர் சுல்தானா, செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.

