ADDED : மே 13, 2025 02:31 AM
மல்லசமுத்திரம் :மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், துப்புரவு பணியாளர்களுக்கு இலவச பேட்டரி வண்டி வழங்கும் விழா நடந்தது. அப்போது, மல்லசமுத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறோம். பள்ளியில், தமிழ், ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது. மேல்நிலை படிப்பான பிளஸ் 1, பிளஸ் 2வில், ஆங்கில வழி கல்விக்கான வகுப்பில், மருத்துவம் சார்ந்த படிப்புக்கான பாடங்கள் மட்டுமே இயங்கி வருகிறது. சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவியர், கணிதவியல், கலை கணினி, வரலாறு உள்ளிட்ட படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.
இப்படிப்புகள் இங்கு இல்லாததால், வெகுதொலைவில் உள்ள மாற்று பள்ளிகளுக்கு செல்லும் சூழல் உள்ளது. நாங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, மேற்கூறிய ஆங்கிலவழி படிப்பிற்கான வகுப்புகளை தயவுசெய்து ஏற்படுத்தி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.