/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டெண்டர் எடுத்த வேலைகள் பாதியில் நிறுத்தம் கவுன்சிலர்கள், மக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
/
டெண்டர் எடுத்த வேலைகள் பாதியில் நிறுத்தம் கவுன்சிலர்கள், மக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
டெண்டர் எடுத்த வேலைகள் பாதியில் நிறுத்தம் கவுன்சிலர்கள், மக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
டெண்டர் எடுத்த வேலைகள் பாதியில் நிறுத்தம் கவுன்சிலர்கள், மக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
ADDED : மே 02, 2024 07:37 AM
ப.வேலுார் : ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் நடந்த மன்ற கூட்டத்தில், வார்டு பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கவும், சாக்கடை வசதி அமைக்கவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டது. சாக்கடை, சாலை வசதி அமைக்க பணிகள் நடந்து வந்த நிலையில், ஒருசில வார்டுகளில் பணிகள் நடக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, ப.வேலுாரை சேர்ந்த கவுன்சிலர்கள், 'டெண்டர்' எடுத்தவர்களிடம் கேட்டபோது, ப.வேலுார் டவுன் பஞ்., இளநிலை பொறியாளர் வீரமணி, தற்காலிகமாக பணிகளை நிறுத்த சொல்லியதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த வார்டு கவுன்சிலர்கள், நேற்று பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியல் செய்ய முற்பட்டனர்.
தகவலறிந்து வந்த ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு, அதிருப்தி கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ப.வேலுார், 6வது வார்டு கவுன்சிலர் துரைசெந்தில்குமார் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், செயல் அலுவலரிடம், 'தங்கள் வார்டுகளில் பணிகள், பல மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை. இதற்குக் காரணம் இளநிலை பொறியாளர் வீரமணி' என, புகார் தெரிவித்தனர்.
ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு, 'கிடப்பில் உள்ள பணிகளை தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி, கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து, இளநிலை பொறியாளர் வீரமணியிடம் தொலைபேசியில் கேட்டபோது, 'வார்டுகளில் சாக்கடை அமைக்கும் பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டதில் அதே அளவுக்கு பணியை செய்து விட்டனர். மீதமுள்ள பணி விரைவில் நடைபெறும். நான் பினாமி பெயரில் எந்த டெண்டரும் எடுக்கவில்லை' என்றார்.

