/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைவர் - துணை தலைவர் இடையே மோதல் இரண்டாவது முறையாக கூட்டம் ஒத்திவைப்பு
/
தலைவர் - துணை தலைவர் இடையே மோதல் இரண்டாவது முறையாக கூட்டம் ஒத்திவைப்பு
தலைவர் - துணை தலைவர் இடையே மோதல் இரண்டாவது முறையாக கூட்டம் ஒத்திவைப்பு
தலைவர் - துணை தலைவர் இடையே மோதல் இரண்டாவது முறையாக கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 29, 2025 02:02 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர், துணை தலைவரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தை துணை தலைவர் உள்பட, 17 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இதனால், இரண்டாவது முறையாக மீண்டும் கூட்டம்
ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சியில், ஆளுங்கட்சியான, தி.மு.க.,வை சேர்ந்த செல்வராஜ் தலைவராகவும், பாலமுருகன் துணை தலைவராகவும் உள்ளனர். இவர்கள் இருவரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கடந்த, 25ல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், துணை தலைவரின் இருக்கை, கவுன்
சிலர்களின் வரிசைக்கு மாற்றப்பட்டது. இதனால், தலைவர், துணை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, துணை தலைவர் பாலமுருகன், 'இனிமேல் எந்த கூட்டத்திற்கும் வரமாட்டேன்' என, தெரிவித்துவிட்டு வெளியேறினார். அவருடன், ஆதரவு கவுன்சிலர்களும் சென்றதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு நகராட்சி கூட்டம் துவங்கியது. அதில், கடந்த, 25ல் நடந்த கூட்டத்தில் இடமாற்றப்பட்டிருந்த துணை தலைவரின் இருக்கை, மீண்டும் தலைவரின் இருக்கைக்கு சமமாக போடப்பட்டது. ஆனால், துணை தலைவர் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள், 16 பேரும் கூட்டத்தை புறக்கணித்தனர். தலைவர் மற்றும் இவரது ஆதரவு கவுன்சிலர்கள், மூன்று பேர் மட்டுமே வந்திருந்ததால், இரண்டாவது முறையாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து, தலைவர் செல்வராஜிடம் கேட்டபோது, ''துணை தலைவரின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளேன். விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளார். கோரம் இல்லாததால் அடுத்த மாதத்திற்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்கள் பணியில் எந்த தொய்வும் இல்லை,'' என்றார்.
துணை தலைவர் பாலமுருகன் கூறுகையில், ''நகர்மன்ற கூட்டத்தில் நடந்தவை அனைத்தும் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளேன். இனிமேல் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன்,'' என்றார்.