/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி தொடர் விடுமுறைக்கு பின் மீண்டும் கேட்கும் விசைத்தறி சத்தம்
/
தீபாவளி தொடர் விடுமுறைக்கு பின் மீண்டும் கேட்கும் விசைத்தறி சத்தம்
தீபாவளி தொடர் விடுமுறைக்கு பின் மீண்டும் கேட்கும் விசைத்தறி சத்தம்
தீபாவளி தொடர் விடுமுறைக்கு பின் மீண்டும் கேட்கும் விசைத்தறி சத்தம்
ADDED : அக் 30, 2025 02:41 AM
பள்ளிப்பாளையம், தீபாவளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால், பள்ளிப்பாளையம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியதால், மீண்டும் விசைத்தறி சத்தம் கேட்க துவங்கியது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆண்டுதோறும் வழக்கமாக தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை விடுமுறையாக, மூன்று நாட்கள் விடப்படும். ஆனால், இந்தாண்டு தீபாவளியை பண்டிகையை குறிவைத்து உற்பத்தி செய்த துணிகள் விற்பனையின்றி அதிகளவு தேக்கமடைந்துவிட்டன. தொடர்ந்து உற்பத்தி செய்தால், மேலும் துணிகள் தேக்கமடையும் என்பதால், 10 நாட்கள் தீபாவளி விடுமுறை விடப்பட்டது.
இதனால் எப்போதும் பரபரப்பாக, தறிகள் இயங்கும் சத்தமாக ஒலித்து கொண்டே இருக்கும் பள்ளிப்பாளையம் பகுதியில், ராஜவீதி, ஆர்.எஸ்.சாலை, காந்திபுரம் வீதி, காவேரி, வசந்த நகர், ஆவாரங்காடு, ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர் மற்றும் குடியிருப்பு பகுதி சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், விசைத்தறி தொழிலாளர்களை சார்ந்து இயங்கும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்று மீண்டும் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியதால், 80 சதவீத விசைத்தறி கூடங்கள் செயல்பட தொடங்கின. இதனால் விசைத்தறி சத்தம் மீண்டும் கேட்க தொடங்கியது.
பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:
தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பின், நேற்று முதல் விசைத்தறி கூடங்கள் செயல்பட துவங்கியுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு விற்பனை அதிகளவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தி செய்த காட்டன் லுங்கி மற்றும் துணிகள், 40 சதவீதம் விற்பனையின்றி தேக்கமடைந்து விட்டன. இதனால், தற்போது உற்பத்தி குறைவாக நடக்கும். தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அடுத்ததாக பொங்கல் ஆர்டர் வரும். இந்த பொங்கல் ஆர்டர் வந்தால் தான் வழக்கமான உற்பத்தி நடக்கும். இல்லையெனில் விற்பனையை பொறுத்து உற்பத்தி நடக்கும்.
தொழிலாளர் பற்றாக்குறை, விற்பனை மந்தம் ஆகியவற்றால், நாளுக்குநாள் விசைத்தறி தொழில் தொய்வு ஏற்பட்டு சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

