ADDED : அக் 04, 2025 01:28 AM
ப.வேலுார், :நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே அய்யம்புதுாரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய், 25; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பன் கவியரசனுக்கு பிறந்தநாள் என்பதால், நேற்று முன்தினம் மாலை, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு, அணைக்கட்டு பகுதியில் விஜய், கவியரசன் உள்பட, ஐந்து பேர் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற விஜய், மீண்டும் கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். உடனிருந்த நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தபோது திடீரென விஜய் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த வந்த ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மாயமான விஜயை தேடி வருகின்றனர். காவிரி ஆற்றில் குளித்த இளைஞர் மாயமான சம்பவம், உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.