/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் பகுதியில் இடி, மின்னலுடன் மழை; 8 மணி நேர மின் துண்டிப்பால் மக்கள் அவதி
/
மோகனுார் பகுதியில் இடி, மின்னலுடன் மழை; 8 மணி நேர மின் துண்டிப்பால் மக்கள் அவதி
மோகனுார் பகுதியில் இடி, மின்னலுடன் மழை; 8 மணி நேர மின் துண்டிப்பால் மக்கள் அவதி
மோகனுார் பகுதியில் இடி, மின்னலுடன் மழை; 8 மணி நேர மின் துண்டிப்பால் மக்கள் அவதி
ADDED : டிச 23, 2024 09:14 AM
மோகனுார்: மோகனுாரில், இடி, மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கனமழை பெய்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால், 8 மணி நேரம் கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டனர்.
வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 25 வரை இதே நிலை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், இரண்டாம் நாளாக நேற்று முன்தினம், ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, மோகனுார் பகுதியில் சூறை காற்றுடன், இடி, மின்னல் சேர்ந்து கனமழை பெய்தது. இரவு, 9:30 மணிக்கு துவங்கிய மழை, ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில், மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இடி, மின்னல், சூறை காற்று காரணமாக, உயர் அழுத்த மின் கம்பி மீது தென்னை மட்டை, பனை ஓலை விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒருவந்துார் பகுதியில் தென்னை மட்டை, வேப்பமரம் முறிந்து விழுந்ததாலும், வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து, மோகனுார், ஒருவந்துார் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
அதேபோல், கணேசபுரத்தில், பனை ஓலை விழுந்ததால், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அதன் காரணமாக, எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் இருந்து, பேட்டப்பாளையம், மணப்பள்ளி, வாழவந்தி உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவற்றை மின் ஊழியர்கள் கண்டுபிடித்து, விடிய விடிய மரக்கிளைகளை வெட்டி அகற்றியும், உயர் அழுத்த மின் கம்பியை மாற்றி சரி செய்தும், மீண்டும் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மின் இணைப்பு வழங்கினர். இந்த, 8 மணி நேரம் மின் துண்டிப்பால், இரவு முழுவதும், கொசுக்கடியால் சிறுவர் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: (மி.மீட்டரில்): மோகனுார், 32, நாமக்கல், 5.50, ப.வேலுார், 40, திருச்செங்கோடு, 4 என, மொத்தம், 81.50 மி.மீ., மழை பெய்துள்ளது.

