ADDED : அக் 08, 2025 01:22 AM
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆர்.சி.எம்.எஸ்.,ல் வாரந்தோறும் செவ்வாய் கிழமை மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட், நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகள், ஆர்.சி.எம்.எஸ்., மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் மஞ்சளை அறுவடை செய்து, வேகவைத்து, காய வைத்து, ஜலித்து எடுத்து வருவர்.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வர, விவசாயிகளால் தயார் செய்ய முடியவில்லை. இதையடுத்து, நேற்று ஆர்.சி.எம்.எஸ்.,க்கு குறைந்த அளவே மஞ்சள் மூட்டைகள் வந்திருந்தன. இதையடுத்து, நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. சில தனியார் மண்டிகளில் மட்டும் மஞ்சள் ஏலம் நடந்தது. கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த வாரம் மழையால் ரத்து செய்ப்பட்டுள்ளது. அடுத்த வாரம் செவ்வாய் கிழமை வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.