/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு; முதல்வர் இன்று அரசாணை வெளியீடு
/
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு; முதல்வர் இன்று அரசாணை வெளியீடு
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு; முதல்வர் இன்று அரசாணை வெளியீடு
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு; முதல்வர் இன்று அரசாணை வெளியீடு
ADDED : ஆக 12, 2024 07:01 AM

நாமக்கல்: நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அவற்றை, நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.
நாமக்கல் நகராட்சி, 39 வார்டுகளை கொண்டது. இது, 55.24 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு, 2 லட்சத்து, 15,000 பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி விதிகளின்படி, ஆண்டு வருமானம், 30 கோடி ரூபாயும், மக்கள் தொகை, 3 லட்சம் இருந்தால் மாநகராட்சியாக தரம் உயர்த்த முடியும்.
நாமக்கல் நகராட்சியின் சராசரி ஆண்டு வருமானம், 43 கோடியே, 84 லட்சம் ரூபாய். அதனால், நாமக்கல் நகராட்சியை பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதபள்ளி ஆகிய, 12 கிராம பஞ்.,களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த பஞ்.,களை தற்போதைய நகராட்சியுடன் இணைத்தால் மொத்த பரப்பளவு, 145.31 சதுர கி.மீட்டராக அதிகரிக்கும். இதேபோல், நாமக்கல் மாநகராட்சியின் மக்கள் தொகையும், 3 லட்சத்து, 5,061 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழக சட்டசபையில் நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக., 12) நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை வெளியிட உள்ளார். அதை, நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் பெற்றுக்கொள்ள உள்ளனர் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக, நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர், எம்.பி., ராஜேஸ்குமாரிடம் வாழ்த்து பெற்றனர்.