/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மெத்தனம் கிராம மக்கள் சாலை மறியல்
/
உடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மெத்தனம் கிராம மக்கள் சாலை மறியல்
உடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மெத்தனம் கிராம மக்கள் சாலை மறியல்
உடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மெத்தனம் கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 19, 2024 01:33 AM
மோகனுார், நவ. 19-
மோகனுார், எஸ்.வாழவந்தி பஞ்.,க்குட்பட்ட மேலப்பட்டியில், 250க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், வங்கி, மளிகை கடை, வெளியூர் செல்ல, ஏரி வழியாக எஸ்.வாழவந்தி வந்து செல்ல வேண்டும். ஏரி வழியாக மேலப்பட்டி செல்லும் சாலையில், மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர், ஏரிக்கு வரும் வகையில் வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
கடந்த அக்., 21ல், இந்த பாலத்தின் மீது கிழங்கு லோடு ஏற்றிச்சென்ற லாரி, லோடு தாங்காமல் உடைந்தது. அந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், மேலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி வரும் பொதுமக்கள், மாற்று பாதையில், பல கி.மீ., சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, எஸ்.வாழவந்தி அரசு பள்ளி அருகே, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ.,க்கள் பாலமுருகன், கீதா, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி' அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

