/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜோதிடர் கூறியதாக வைரல்நரசிம்மர் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு
/
ஜோதிடர் கூறியதாக வைரல்நரசிம்மர் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு
ஜோதிடர் கூறியதாக வைரல்நரசிம்மர் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு
ஜோதிடர் கூறியதாக வைரல்நரசிம்மர் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு
ADDED : டிச 17, 2024 01:48 AM
நாமக்கல், டிச. 17-
ஜோதிடர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், நாமக்கல் நரசிம்மர் கோவிலில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து தியானத்தில் ஈடுபட்டனர். அதனால், பரபரப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும், மார்கழியில் நரசிம்மர் கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், மார்கழி முதல் நாளான நேற்று, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே கூடினர். சூரிய உதயத்திற்கு பின், அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் அமர்ந்து, ஒரே இடத்தில் ஒரு மணி நேரம் தியானம் செய்தனர்.
முன்னதாக சமூக வலைதள பக்கம் ஒன்றில் ஆன்மிக ஜோதிடர் ஒருவர், '16ல் மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால், நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்து, ஒரு மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும்' என,
தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலானது. அவற்றை பார்த்த பொதுமக்கள், திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பட்டாச்சாரியார்கள் சிலர் கூறியதாவது:
மார்கழி மாதம், 1ல் சூரியன் தன் ராசி பயணத்தை தனுசு ராசிக்கு செலுத்தக்கூடிய தினம். ஆனால், ஜோதிடர் ஒருவர், 'யுடியூப்' வாயிலாக, காலை, 6:15 முதல், 7:15 வரை, நாமகிரி தாயாருக்கு மந்திரங்களை சொன்னால் செல்வம் பெருகும் என கூறியிருந்தார். இங்கு வழக்கமான அனைத்து பூஜைகளும் நடந்து வருகிறது. பொதுவாக, நரசிம்மர், நாமகிரி தாயாரை எப்போது வழிபட்டாலும் அருள் கிடைக்கும். ஆனால், கிரகங்கள், 9.5 ஆண்டுகளுக்கு பின் தான் கூடும் என ஜோதிடர் கூறியதால் தான், பல்வேறு பகுதியில் இருந்து திடீரென ஏராளமான பக்தர்கள் வந்து தியானம் செய்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.