/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தோல் தொழிற்சாலை, சிறைச்சாலைக்கு ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம்: விவசாயிகள் ஆவேசம்
/
தோல் தொழிற்சாலை, சிறைச்சாலைக்கு ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம்: விவசாயிகள் ஆவேசம்
தோல் தொழிற்சாலை, சிறைச்சாலைக்கு ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம்: விவசாயிகள் ஆவேசம்
தோல் தொழிற்சாலை, சிறைச்சாலைக்கு ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம்: விவசாயிகள் ஆவேசம்
ADDED : ஜூலை 26, 2025 01:32 AM
நாமக்கல், 'நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில், தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க, ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம். இதற்காக எங்கள் உயிரையும் கொடுக்க தயார்' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:
மெய்ஞானமூர்த்தி, விவசாயி: தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. மனிதர் முதல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வரை கடித்து குதறுகிறது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
துர்காமூர்த்தி, கலெக்டர்: ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில், நாய் தொல்லை அதிகம் உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த, கால்நடை பராமரிப்புத்துறை என்ன திட்டம் வைத்துள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை: அரசிடம் நிதி கேட்டுள்ளோம். போதிய நிதி வந்ததும், தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலசுப்ரமணியன், மாநில பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அமைந்தால், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
மேலும், தற்போதைய மதிப்பில், ஒரு ஏக்கர் ஐந்து கோடி ரூபாய் வீதம், 200 ஏக்கர் நிலம், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ளது. அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம். அதனால், ஒரு சென்ட் நிலத்தைக்கூட தோல் தொழிற்சாலை மற்றும் சிறைச்சாலை அமைக்க வழங்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்க தயார்.
குப்புதுரை, தலைவர், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து தடையில்லா சான்று வாங்கிவர நிர்பந்திக்கின்றனர். அவற்றை முழுமையாக ரத்து செய்து, எளிய முறையில் பழையபடி பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.