/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை
/
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை
ADDED : ஜூலை 11, 2025 01:53 AM
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் நேற்று மாலை, 5:00 மணிக்கு திடீரென காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரம் மட்டுமின்றி புதுச்சத்திரம், புதன் சந்தை, கவுண்டம்பளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டனர். நாமகிரிப்பேட்டை பகுதியில் துாறலுடன் மழை நின்றது. திடீர் மழையால் ராசிபுரம் பகுதி முழுவதும் தட்ப வெட்ப நிலை மாறியது.
* சேந்தமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் சாலையில் கரைபுரண்டு மழை தண்ணீர் ஓடியது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த சூழலில், மழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். நேற்று மாலை 6:00 மணி முதல் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. போக போக காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேல் விடாது மழை கொட்டியது. எதிர்பாராத மழையால் பொதுமக்கள் நனைந்த படியே வீடுகளுக்கு சென்றனர்.
* திருச்செங்கோட்டில் நேற்று மாலை கன மழை கொட்டியது. இதனால் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடை கழிவு நீருடன் கலந்து, மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. திருச்செங்கோட்டில் இருந்து சேலம், நாமக்கல், ராசிபுரம், ஆத்துார் சென்ற பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்றன. இரு சக்கர வாகனங்களில் சென்ற பலர், மிகவும் அவதிப்பட்டனர்.
* குமாரபாளையத்தில் நேற்று மதியம், 2:30 மணியளவில் கன மழை பெய்தது. இந்த மழை இரண்டு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிகளவில் மழை நீர் சென்றது.