/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லீரல் பறிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை
/
கல்லீரல் பறிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை
ADDED : ஆக 24, 2025 12:44 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே கல்லீரல் விற்ற பெண்ணிடம், சிறப்பு குழு அதிகாரிகள்
விசாரணை நடத்தினர்.
பள்ளிப்பாளையம் அருகே அலமேடு பகுதியை சேர்ந்தவர் பேபி, 37; இவர், வாங்கிய கடனை அடைப்பதற்காக, தன் கிட்னியை விற்க முடிவு செய்தார். இதையடுத்து, பெண் புரோக்கர் ஒருவர் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், 'பேபியின் கிட்னி மேட்ஜ் ஆகவில்லை' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து புரோக்கர்கள், 'பேபியிடம் கிட்னி எடுப்பதற்கு செய்த மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை கொடு; இல்லையெனில்
கல்லீரலை விற்பனை செய்' என, மிரட்டியுள்ளனர். மேலும், கல்லீரல் கொடுத்தால், எட்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் என தெரிவித்து, 4.50 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த, 17ல், பேபி, 'கல்லீரல் விற்றதால், தற்போது எந்த வேலையும் செய்ய முடிய வில்லை; உடல் பலவீனமாகிவிட்டது; எனக்கு, அரசு மருத்து உதவி செய்ய வேண்டும்' என, பத்திரிகை, ஊடகங்களில் தெரிவித்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க, தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழுவினர் அமைக்கப்பட்டனர். கடந்த, 20ல், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் பேபிக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. வயிறு பகுதிக்கு ஸ்கேன் எடுக்க, ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம், நேற்று முன்தினம், விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, கல்லீரலை விற்ற பேபி கூறியதாவது:
சிறப்பு குழுவினர் என்னிடம் விசாரணை நடத்தினர். 'கல்லீரலை எதற்காக விற்பனை செய்தீர்கள், தற்போது இதை வெளியில் சொல்ல காரணம் என்ன' என, கேட்டனர். நான் பாதிக்கப்பட்டது போல் வேறு யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தெரிவித்தேன் என, கூறினேன். மேலும், எனக்கு உடல் நிலை பலவீனமாக உள்ளதால், மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். என் மகள் படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.