/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் சர்க்கரை ஆலையில் ரூ.7 கோடியில் கூடுதல் எத்தனால் உற்பத்தி பிரிவு பணி துவக்கம்
/
மோகனுார் சர்க்கரை ஆலையில் ரூ.7 கோடியில் கூடுதல் எத்தனால் உற்பத்தி பிரிவு பணி துவக்கம்
மோகனுார் சர்க்கரை ஆலையில் ரூ.7 கோடியில் கூடுதல் எத்தனால் உற்பத்தி பிரிவு பணி துவக்கம்
மோகனுார் சர்க்கரை ஆலையில் ரூ.7 கோடியில் கூடுதல் எத்தனால் உற்பத்தி பிரிவு பணி துவக்கம்
ADDED : செப் 03, 2025 12:48 AM
நாமக்கல், ''மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏழு கோடி ரூபாய் மதிப்பில், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப்பிரிவு கட்டுமான பணி துவக்க விழா, இன்று நடக்கிறது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏற்கனவே தினமும், 30,000 லி., எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதலாக, 20,000 லி., எத்தனால் உற்பத்தி செய்யும் வகையில், எத்தனால் உற்பத்தி பிரிவை விரிவுபடுத்தி, நாள் ஒன்றுக்கு, 50,000 லி., எத்தனால் தயாரிக்கும் வகையில், இயந்திரங்களை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, ஏழு கோடி ரூபாய் மதிப்பில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த நிறுவனம் மூலம், எத்தனால் கூடுதல் பிரிவு அமைக்கப்பட உள்ளது. கூடுதல் எத்தனால் பிரிவு அமைக்கும் பணி துவக்க விழா நாளை(இன்று) காலை, 11:00 மணிக்கு, மோகனுார் சர்க்கரை ஆலையில் நடக்கிறது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப்பிரிவு கட்டுமான பணிகளை துவக்கி வைக்கின்றனர். மத்திய அரசு, 'பெட்ரோல் மற்றும் டீசலில் கூடுதலாக எத்தனால் கலக்கலாம்' என, அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஆலையின் வருவாய் உயர்ந்து, கரும்பு விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை உடனுக்குடன் வழங்க முடியும். மேலும், ஆலை லாபத்தில் செயல்பட்டு தற்சார்பு அடையும்.
தமிழகத்தில் உள்ள, மோகனுார் உள்ளிட்ட, 11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், தி.மு.க., ஆட்சியில் இணை மின் உற்பத்தி திட்டம் துவக்கப்பட்டது. அதன் பின், 10 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இணை மின் திட்டப்பணிகளை நிறைவேற்ற, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தி திட்டப்பணிகள் விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.