/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
/
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு
ADDED : செப் 21, 2025 12:52 AM
நாமக்கல், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர், தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் கோட்டை பகுதியில், ஒரே கல்லினால் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், திருமஞ்சள், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, கனகாபிேஷகத்துடன் நிறைவு பெற்றது.
அதையடுத்து, சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
* பள்ளிப்பாளையம், வெடியரசம்பாளையம் அடுத்துள்ள பெருமாள் மலையில் பழமையான பிரசித்தி பெற்ற கரிய வரதராஜ் பெருமாள் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் காலை முதலே மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* சேந்தமங்கலம் அடுத்துள்ள, நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் நைனாமலை உச்சியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாளுக்கும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 3,700 படிகள் ஏறி வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* மோகனுார், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், சுவாமி பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மணப்பள்ளியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில், மூலவருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துளசி மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.
மோகனுார் அடுத்த வளையப்பட்டி பத்மாவதி மஹாலக்ஷ்மி தாயார் சமேத ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், மூலவர் பிரசன்ன வெங்கட் ரமண பெருமாளுக்கும், பத்மாவதி மகாலட்சுமி தாயருக்கும் பால், தயிர், திருமஞ்சனம், கஸ்துாரி மஞ்சள், பச்சரிசிமாவு கரைசல், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் அபி ேஷகம் செய்யப்பட்டது.
தோளூர் சருவ மலையில் உள்ள ரங்கநாத சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கும், பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
* நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா கனவாய் ஆத்துார் பிரதான சாலையில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
நேற்று முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் செந்துாரம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பூஜைக்கு முன்பு திரிக்கோடி தீபம் ஏற்றறப்பட்டது.