/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
/
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
ADDED : ஜன 29, 2024 11:29 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள், பரிசுகளை அள்ளிச்சென்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், 500 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இப்போட்டியை, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக, ஆர்.டி.ஓ., சுகந்தி உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர்.
தொடர்ந்து, வாடிவாசல் வழியாக மாடுகள் துள்ளிக்குதித்து வெளியே வந்தன. களத்தில் காளைகளை பிடிக்க காத்திருந்த வீரர்கள் துணிச்சலாக சென்று, காளைகளின் திமில்களை பிடித்து அடக்கினர்.
மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம், பத்து கிராம் வெள்ளி நாணயம், டிரெஸ்சிங் டேபிள், குக்கர், மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், வாடிவாசலிலிருந்து வெளியே சென்ற, இரண்டு காளைகள் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்தன. காளைகள் உள்ளே வராமல் தடுப்பதற்காக, வாடிவாசல் கதவுகளை திடீரென அடைத்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, காளையை பிடித்துக்கொண்டு நின்றிருந்த மாட்டின் உரிமையாளர் சேலத்தை சேர்ந்த தமிழரசனின் கால் விரல்கள் துண்டாகின. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.எஸ்.எம்., கல்வி நிறுவன தாளாளர் மதிவாணன், ஆற்றல் அசோக்குமார், தாசில்தார் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
பாதியில் நிறுத்தம்
போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு, விழாக்குழு சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால், சில காளை உரிமையாளர்கள், டோக்கன் பெறாமல், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை அகற்றிவிட்டு களத்தில் புகுந்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு, போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. டி.எஸ்.பி., இமயவரம்பன், ஆர்.டி.ஓ., சுகந்தி வசம், விழாக்குழுவினர் மீண்டும் போட்டி நடத்த அனுமதி தரவேண்டி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, மீண்டும் போட்டி நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது.