ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரும் மூவர்; ஐகோர்ட்டில் கணவர் போனி கபூர் வழக்கு
ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரும் மூவர்; ஐகோர்ட்டில் கணவர் போனி கபூர் வழக்கு
ADDED : ஆக 26, 2025 07:25 AM

சென்னை: மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் வாயிலாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு, மூன்று பேர் உரிமை கோருவதாக கூறி, அவரது கணவரான போனி கபூர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவரின் மனு விபரம்:
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கினார். கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருகின்றனர்.
முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கூற முடியாது.
எனவே, மூவரும் மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டு, மனுவை, நீதிபதி முடித்து வைத்தார்.