ADDED : அக் 16, 2024 12:56 AM
தொடர் மழையால்
மஞ்சள் ஏலம் ரத்து
நாமகிரிப்பேட்டை, அக். 16-
நாமகிரிப்பேட்டை பகுதியில், ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது.
இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். அதுமட்டுமின்றி, 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகளிலும் மஞ்சள் ஏலம் நடக்கிறது. மஞ்சளை விற்பதற்கு கொண்டு வருவதற்கு முன், பல்வேறு கட்டங்களாக பதப்படுத்த வேண்டியுள்ளது.
மஞ்சளை வெட்டி, உலர வைத்து, வேக வைக்க வேண்டும். வேக வைத்த மஞ்சளை காயவைத்து, சுத்தப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வருவார்கள். கடந்த வாரம் முழுவதும் தொடர் மழை பெய்ததால் விவசாயிகளால் மேற்கண்ட பணிகளை செய்ய முடியவில்லை. இதனால், நேற்று மஞ்சள் வரத்து இல்லை. ஆர்.சி.எம்.எஸ்., உள்ளிட்ட தனியார் மண்டிகளிலும் மஞ்சள் வரத்து இல்லாததால், நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் வழக்கம்போல் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.