/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயிலுக்கு "யுனஸ்கோ' கவுரவ தினம் சர்வதேச நீராவி ரயில் அமைப்பு துவக்கம்
/
மலை ரயிலுக்கு "யுனஸ்கோ' கவுரவ தினம் சர்வதேச நீராவி ரயில் அமைப்பு துவக்கம்
மலை ரயிலுக்கு "யுனஸ்கோ' கவுரவ தினம் சர்வதேச நீராவி ரயில் அமைப்பு துவக்கம்
மலை ரயிலுக்கு "யுனஸ்கோ' கவுரவ தினம் சர்வதேச நீராவி ரயில் அமைப்பு துவக்கம்
ADDED : ஜூலை 17, 2011 01:21 AM
ஊட்டி: நீலகிரி மலை ரயிலுக்கு பாரம்பரிய சின்னத்துக்கான 'யுனஸ்கோ' அந்தஸ்து கிடைத்து 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, சர்வதேச நீராவி ரயில் அமைப்பு ஒன்று துவக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் ரயில் சுற்றுலாவை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டை கடந்து இயங்கி வரும் நீலகிரி மலை ரயிலுக்கு பாரம்பரிய சின்னத்துக்கான 'யுனஸ்கோ' விருது தென்னாப்பிரிக்கா தலைநகர் டர்பன் நகரில் நடந்த உலக பாரம்பரிய குழுவினரால், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்பு, இந்த ரயில் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்று, சர்வதேச அள வில் பிரபலமானது. இதனால், ஆண்டுக்காண்டு இதில் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் விதத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர், சேலம் கோட்ட பொது மேலாளர் ஆகியோர் தனி கவனம் செலுத்தி, இதன் இன்ஜின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக, குன்னூர் முதல் ரன்னிமேடு வரை சிறப்பு ரயிலை தனியார் மூலம் இயக்கவும், 'புட் பிளேட் ஜெர்னி' என்றழைக்கப்படும் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மலை ரயிலுக்கு 'யுனஸ்கோ' கவுரம் கிடைத்த நாளில், சர்வதேச நீராவி ரயில் அமைப்பு ஒன்று புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவிலான நீராவி ரயில் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறுகையில், ''மலை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் நீலகிரி மலை ரயிலுக்கு பாரம்பரிய சின்னத்துக்கான 'யுனஸ்கோ' கவுரவம் கிடைத்து 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தினத்தை நினைவு கொள்ளும் வகையில், எங்கள் அறக்கட்டளை சார்பில், சர்வதேச நீராவி ரயில் அமைப்பு (இன்டர்நேஷனல் ஸ்டீம் ரயில்வே சொசைட்டி) துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டார்லிங், இமாச்சலம் மட்டுமல்லாமல், உலகளவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு உட்பட பிற நாடுகளில் உள்ள நீராவி ரயில் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, இதற்கென ஒரு 'வெப்சைட்' துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நீராவி ரயிலை பாதுகாக்கும் முயற்சியும், ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.