/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீருக்கு திண்டாடும் சுற்றுலா பயணிகள்செயல்படாத 'வாட்டர் ஏ.டி.எம்.,'கண்டு கொள்ளாத உள்ளாட்சி அமைப்புகள்
/
குடிநீருக்கு திண்டாடும் சுற்றுலா பயணிகள்செயல்படாத 'வாட்டர் ஏ.டி.எம்.,'கண்டு கொள்ளாத உள்ளாட்சி அமைப்புகள்
குடிநீருக்கு திண்டாடும் சுற்றுலா பயணிகள்செயல்படாத 'வாட்டர் ஏ.டி.எம்.,'கண்டு கொள்ளாத உள்ளாட்சி அமைப்புகள்
குடிநீருக்கு திண்டாடும் சுற்றுலா பயணிகள்செயல்படாத 'வாட்டர் ஏ.டி.எம்.,'கண்டு கொள்ளாத உள்ளாட்சி அமைப்புகள்
ADDED : ஆக 20, 2024 02:00 AM

குன்னுார்;நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டபோது அறிமுகம் செய்யப்பட்ட, 'வாட்டர் ஏ.டி.எம்.,கள்' செயல்படாததால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 23 ஆண்டுகளாக 'பிளாஸ்டிக்' தடை உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஆக., 15ம் தேதியில் இருந்து, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு ஐகோர்ட் உத்தரவின் பேரில் தடை விதிக்கப்பட்டது.
இதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில், 70 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்., அமைக்க முடிவு செய்து, 68 வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டன. அவை, 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.
அதில், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் போடும் பட்சத்தில், முறையே, ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் வரை குடிநீர் பிடித்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
டாங்கில், 800 லிட்டர் தண்ணீர், 400 லிட்டர் வரை காலியாகும் போது 'ஆன்லைன்' மூலம் இதனை பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., செல்லும். அதன் பேரில் மீண்டும் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லை
இந்நிலையில், சுற்றுலா மையங்கள் உட்பட பல இடங்களில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்களில், கடந்த சில மாதங்களாக போதிய பராமரிப்பு இல்லாததால், அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து, அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்கள் மூலம் இதனை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. சுற்றுலா பயணிகளுக்கு ஓரளவு பயன் ஏற்பட்டது.
இந்நிலையில், 'ஆன்லைன்' மூலம் இணைக்கப்பட்ட பல இயந்திரங்களில் சமீபகாலமாக பெரும்பாலும் குடிநீர் வருவதில்லை. அதில், நாணயங்களை போடும் சுற்றுலா பயணிகளின் பணம் வீணாகிறது. மேலும், குடிநீர் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை, குன்னுார் கல்லார்; கோத்தகிரி குஞ்சப்பனை; கூடலுார் கக்கனல்லா; பந்தலுார் தாளூர் உட்பட அனைத்து பகுதியிலும் சோதனை செய்து, குடிநீர் பாட்டில் இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு, பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அதே வேளையில், குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு இடையில் தண்ணீர் எங்கும் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஐந்து லிட்டர் குடிநீர் 'கேன்' வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே வாட்டர் ஏ.டி.எம்.,கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மாவட்ட கூடுதல் கலெக்டர் சதீஷ் கூறுகையில்,'' மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலும் இந்த பிரச்னை குறித்து பேசப்பட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்கள், இயந்திரங்களை கண்காணித்து பராமரிக்க வேண்டியது அவசியம். இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

