/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாம்பார் மணக்காததால் கார்டுதாரர்கள் கவலை 119 டன் பருப்பு தட்டுப்பாடு! ஓரிரு நாளில் வழங்கப்படுவதாக அதிகாரி தகவல்
/
சாம்பார் மணக்காததால் கார்டுதாரர்கள் கவலை 119 டன் பருப்பு தட்டுப்பாடு! ஓரிரு நாளில் வழங்கப்படுவதாக அதிகாரி தகவல்
சாம்பார் மணக்காததால் கார்டுதாரர்கள் கவலை 119 டன் பருப்பு தட்டுப்பாடு! ஓரிரு நாளில் வழங்கப்படுவதாக அதிகாரி தகவல்
சாம்பார் மணக்காததால் கார்டுதாரர்கள் கவலை 119 டன் பருப்பு தட்டுப்பாடு! ஓரிரு நாளில் வழங்கப்படுவதாக அதிகாரி தகவல்
ADDED : மே 28, 2024 11:56 PM
ஊட்டி;நீலகிரி மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய, 119 டன் பருப்பு தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில், 'முழு நேரம், பகுதி நேரம்,' என, 404 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2.20 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர்.
கார்டு தாரர்களுக்கான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், தமிழ்நாடு வாணிப கழகத்தின் சார்பில், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
119 டன் பருப்பு தட்டுப்பாடு
மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும், 184 டன் பருப்பு வழங்கப்படுகிறது. நடப்பு மாதத்தின் துவக்கத்தில் வழங்கப்பட்ட பருப்பில் தரம் இல்லாமல் இருப்பதாக மாநிலம் முழுவதும் புகார் எழுந்தது. புகாரை அடுத்து தரம் இல்லாமல் வழங்கப்பட்ட பருப்பு நிறுத்தப்பட்டது.
இதனால், இம்மாதம் இறுதிவரை கார்டுதாரர்களுக்கு பருப்பு வழங்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்லும் கார்டுதாரர்கள் பருப்பு இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இம்மாதம் முடிந்தும் இன்னும் பருப்பு வரவில்லை. இதனால், வீடுகளில் வைக்கப்படும் சாம்பார்களில் சுவை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சில கார்டுதாரர்கள் கூறுகையில், 'இம்மாதம் இதுவரை பருப்பு வழங்கப்படவில்லை. ரேஷன் கடைக்கு சென்று கேட்டால், 'வந்தா தர மாட்டோமா' என்ற அலட்சிய பதில் மட்டுமே கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு கார்டுதார்களுக்கான பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளோம்,' என்றனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், 404 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2.20 லட்சம் கார்டு தாரர்களுக்கு மாதந்தோறும், 184 டன் பருப்பு வழங்கப்படுகிறது.
இம்மாத துவக்கத்தில், 65 டன் பருப்பு கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, தரம் இல்லாத பருப்பு வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள, 119 டன் பருப்பு ஓரிரு நாளில் வந்து விடும். வந்த பின் உடனடியாக, கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்,''என்றார்.