/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூங்கில் காட்டில் வனத்தீ
/
தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூங்கில் காட்டில் வனத்தீ
ADDED : மார் 28, 2024 05:03 AM

கூடலுார் : கூடலுார் பகுதியில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், நடப்பு ஆண்டு கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறட்சி மற்றும் வனத்தீயால், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகளால் மனித- யானை மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு மைசூரு தேசிய நெடுஞ்சாலை மாக்கமூலா, மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தின் பின்பகுதியில் இருந்த மூங்கில் காட்டில் திடீர் வனத்தீ ஏற்பட்டு எரிய துவங்கியது.
வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி, வன ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மூங்கில்கள் காய்ந்திருந்தாலும் காற்றின் வேகம் காரணமாக, தீ வேகமாக பரவியது. தொடர்ந்து, கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், 2 ஏக்கர் பரப்பளவில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பலானது. வனத்தீ ஏற்பட காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
* இதேபோன்று, ஊட்டி கிளன்மார்கன் வனப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீ சில நாட்களாக எரிந்தும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் நிலை தொடர்கிறது. அங்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையிலும், சில சுற்றுலா வாகன ஓட்டிகள், சில வன ஊழியர்களின் ஆதரவுடன் சுற்றுலா பயணிகளை, காப்பு காட்டுக்குள் விதிகளை மீறி அழைத்து சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வனத்தீ ஏற்பட்டு வரும் நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளை செல்வதையும் தடுப்புடன், வனத்தீயை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் அத்துமீறி செல்லும் சுற்றுலா வாகனங்களை கண்டு கொள்ளாமல் உள்ள வனத் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.