எக்ஸ்பிரஸ் கட்டண சுரண்டலை தடுக்க நடவடிக்கை அவசியம்
எக்ஸ்பிரஸ் கட்டண சுரண்டலை தடுக்க நடவடிக்கை அவசியம்
ADDED : ஆக 09, 2026 05:32 PM
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மொத்தம் உள்ள, 367 அரசு பஸ்களில், 180 பஸ்கள் எக்ஸ்பிரஸ் பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முறையான கட்டண பட்டியல் பயணிகள் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை.
எக்ஸ்பிரஸ் பெயரில் பஸ்கள் இயக்கினால் சாதாரண பஸ்கள் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதுடன் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், நீலகிரி மாவட்டத்தில், எக்ஸ்பிரஸ் இயக்குவதற்கான உரிமமே வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ததாக ஐகோர்ட்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் பதிலளித்துள்ளார்.
எனினும், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்ற கோரி மனு அளித்தும், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளால் எந்தவொரு உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக, நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில்,
அரசு நிறுவனமே மக்களை அப்பட்டமாக சுரண்டுவதை ஐகோர்ட் சென்றும், அதனை தடுக்க முடியாமல் மக்கள் மனச்சோர்வு அடைந்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டுகொள்ள வேண்டாம் என கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் வாயிலாக தெரிய வருகிறது. தற்போது அமைந்துள்ள புதிய அரசாவது மக்கள் நலன் கருதி இந்த அநியாய கட்டண சுரண்டலை, உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
