/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு தெருகூத்து
/
வன வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு தெருகூத்து
ADDED : மே 05, 2024 11:38 PM

பந்தலுார்:முதுமலை புலிகள் காப்பகம் நெலக்கோட்டை வனச்சரகம் சார்பில், வன வளங்களை பாதுகாப்பது குறித்து வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக, கேரளா எல்லை பகுதியான பாட்டவயல் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு வனச்சரகர் கணேசன் தலைமை வகித்து பேசுகையில், ''வன வளங்கள் அழிந்து போவதால், தற்போது மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் தண்ணீரை தேடி தவிக்க வேண்டிய சூழல் உள்ளது.
கோடைகாலங்களில் காடுகளுக்கு தீ வைக்காமலும், வனப்பகுதிகளை அளித்து கட்டடங்கள் மற்றும் விவசாய தோட்டங்களாக மாற்று வதை தவிர்ப்பதும், இது போன்ற காலநிலை மாற்றத்தை தடுக்கும். தவறினால் எதிர்காலத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாமல் போகும் சூழல் உருவாகும்,'' என்றார்.
தொடர்ந்து கோவை விடியல் கலைக்குழு சார்பில், 'காடுகளுக்கு தீ வைப்பது தவிர்த்து அவற்றை பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகள், வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பு,' குறித்து, நடனம், விழிப்புணர்வு பாடல், பறை இசை மற்றும் நாட்டியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், வனவர் சுரேஷ் மற்றும் வனப் பணியாளர்கள், கலைக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.