ADDED : ஜூலை 22, 2026 06:33 PM
பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில் கொப்புள நோய் பரவலால், தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. தேயிலையின் வேர், தண்டு, இலை பகுதிகளை தாக்கும், 15 வகையான பூஞ்சான நோய்களால் தேயிலை விவசாயம் பாதிக்கிறது.
அதில், ‘எக்ஸோபாசிடியம் வெக்ஸான்ஸ்’ என்ற பூஞ்சான வகையை சேர்ந்த கொப்புள நோய், மாவட்டம் முழுவதும் உள்ள தேயிலை தோட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. பசுந்தேயிலைகளில் சிறிய மற்றும் வெளிர் நிற புள்ளிகள் தோன்றி, நாளடைவில் தேயிலை கொழுந்துகள் கருகி உதிர்ந்து விடும். இதனால், 50 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டு, தேயிலை தொழிலை சார்ந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குளிர்ந்த காலநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் மேகமூட்டம் காரணமாக இந்த நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது, மாவட்டத்தில் பரவலாக இந்த நோய் காணப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தேயிலை விவசாய பயிற்சியாளர் அன்பரசு கூறுகையில், ‘‘சூரிய ஒளி குறைவு; கடும் மேகமூட்டம்; வாரத்தில், 2- முதல் 10 செ.மீ., வரை மழை அளவு; 17 முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; 60 முதல் 100 சதவீதம் வரை காற்றின் ஈரப்பதம் உள்ளபோதும், தேயிலை இலை பரப்பில், 12 மணி நேரத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தாலும் இந்த நோய் பரவும். தோட்டங்களில் உள்ள நிழல் தரும் மரக் கிளைகளை அகற்றி, வெயில் படும்படி செய்தால் நோயை கட்டுப்படுத்தலாம். மேலும், தேயிலை வாரியத்தின் அறிவுரையின்படி, மருந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்,’’ என்றார்.
