/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவசமாக போர்வெல்; வேளாண்துறை அறிவிப்பு
/
இலவசமாக போர்வெல்; வேளாண்துறை அறிவிப்பு
ADDED : ஜூலை 03, 2024 10:00 PM
அன்னூர் : 'வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இலவசமாக போர்வெல் அமைத்து தரப்படும்,' என வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
பசூரில், 'அட்மா' திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடந்தது. தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் பிந்து தலைமை வகித்து பேசுகையில், நடப்பாண்டில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பசூர், காரேகவுண்டம் பாளையம், குப்பேபாளையம், குன்னத்தூர் ஆகிய நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊராட்சிகளில் தரிசு நிலங்களை, பயிர் சாகுபடிக்கு கொண்டுவர, 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்கள் தொகுப்பாக கண்டறியப்பட்டு இலவசமாக போர்வெல்லும், சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படும்.மரப்பயிர் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்.
தரிசு நிலத்தில் முற்புதர்களை அகற்றி, சமன் செய்ய, ஒரு எக்டேருக்கு 9,600 ரூபாய் வரை பின்னேற்பு மானியம் வழங்கப்படும். வரப்புகளில் பயிர் சாகுபடி ஊக்குவிக்க, ஒரு எக்டேருக்கு, 300 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
திரவ உயிர் உரங்கள், தொழு உரம், நுண்ணூட்டக் கலவை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். விசை தெளிப்பானுக்கு 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படும், என்றார். ஊராட்சி தலைவர் வித்யா சுகுமார் முன்னிலை வகித்தார்.
வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் சுரேஷ்குமார் பயறு வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த அறிவுறுத்தினார்.