UPDATED : மார் 22, 2024 12:50 PM
ADDED : மார் 22, 2024 12:50 AM

சூலூர்;ஊர், ஊராக சென்று தேர்தல் விதிமீறல்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், சூலூரில் அரசு அலுவலக சுவரில் உள்ள விதி மீறலை கண்டு கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும், ஏப்., 19 ம்தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த, 16 ம்தேதி தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.
தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பம்பரமாக சுற்றி தேர்தல் விதி மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும், ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணங்களை பறிமுதல் செய்தும் தங்கள் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சூலூர் தொகுதியில் மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
யாரும் கண்டு கொள்ளவில்லை
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை ஒட்டி, கட்சி கொடிக்கம்பங்கள், பேனர்கள், அரசியல் கட்சி சுவரொட்டிகள் ஆகியவற்றை உள்ளாட்சி நிர்வாகங்களின் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் இப்பணி தீவிரமாக நடந்தது. அரசு மற்றும் தனியார் இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
ஆனால், சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக சுற்று சுவரில் ஒட்டப்பட்டுள்ள கட்சி சுவரொட்டிகளை, ஆறு நாட்களாகியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இருகூர் பேரூராட்சி நிர்வாகம், நிலையான கண்காணிப்பு குழுவினர் அந்த ரோட்டின் வழியாகத்தான் தினமும் சென்று வருகின்றனர்.
ஆனால், அவற்றை கண்டு கொள்ளவில்லை. இதேபோல், நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளின் எல்லை பகுதிகளில் விதிமீறல்கள் அதிகம் உள்ளன. அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

