ADDED : ஏப் 16, 2024 11:46 PM

பாலக்காடு;பாலக்காடு அருகே, கத்தியால் குத்தி அண்ணனை கொலை செய்த தம்பியை, கொழிஞ்சாம்பாறை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை குலுக்கப்பாறை என்ற பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் ரங்கசாமி, 30, கூலித் தொழிலாளியான இவர், மது அருந்தி வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் குடிபோதையில் வந்த ரங்கசாமி, குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை தட்டிக் கேட்ட சகோதரன் மகேந்திரன், 26, ரங்கசாமி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகேந்திரன், சமையலறையில் இருந்து எடுத்து வந்த கத்தியால், அண்ணனை சரமாரியாக குத்தினார். படுகாயம் அடைந்த ரங்கசாமி திருச்சூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனை கொலை செய்த தம்பி மகேந்திரனை கைது செய்தனர்.

