மலை மாவட்ட கிராம மக்கள் பெரும் அவதி...பஸ்கள் குறைப்பு! கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை அவசியம்
மலை மாவட்ட கிராம மக்கள் பெரும் அவதி...பஸ்கள் குறைப்பு! கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை அவசியம்
UPDATED : ஜூலை 13, 2026 05:24 AM
ADDED : ஜூலை 12, 2026 03:30 PM

குன்னூர்: மலை மாவட்டத்தில், அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், கிராம மலைவாழ் மக்கள் கடும் பாதிப்படைகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பஸ்கள் நாட்டுடமையாக்கப்பட்டதால், அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மினி பஸ் திட்டம் அறிமுகப்படுத்திய பிறகு, கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, பெரும்பாலும் நகர பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மினி பஸ்கள் கட்டணம் உயர்த்தியது. 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. இது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை தேவை
குன்னுார் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பயணித்து ஒருசாரார் பயனடையும் போது, அரசு பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளதால் மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஒரு சாரார் ஆளாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராம மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
கடந்த காலங்களில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, புதிய அரசு இதுகுறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு மினி பஸ்கள் இயக்கத்தை முறைப்படுத்தி மக்களை சுரண்டலில் இருந்து காக்க வேண்டும். நீலகிரி மாவட்ட புவியியல் அமைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை முறைக்கு மினி பஸ் இயக்கம் ரத்து செய்து, ஏழை, எளிய மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில், முன்பு போலவே கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும், என்றார்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ' நீலகிரியை பொறுத்தவரை, 270 வழித்தடத்தில், 320 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி சேவை வழங்க தான் அரசு போக்குவரத்து கழகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மலை மாவட்டத்தில் சில குறைப்பாடுகள் இருந்தாலும், உடனுக்குடன் சரி செய்து சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களை சுட்டி காட்டி சில வழித்தடங்களில் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தாலும், உடனே ஆய்வு மேற்கொண்டு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்.
