/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிட்டாம்பாளையத்தில் மத்திய அரசு அதிகாரி ஆய்வு
/
கிட்டாம்பாளையத்தில் மத்திய அரசு அதிகாரி ஆய்வு
ADDED : ஆக 03, 2024 05:37 AM

கருமத்தம்பட்டி: கிட்டாம்பாளையம் ஊராட்சியில், 'ஜல் சக்தி அபியான்' மத்திய அரசு அதிகாரி ஆய்வு செய்தார்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையத்தில், மத்திய அரசின் நிதி உதவியில் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் 'அம்ரித் சரோவர்' குட்டை உள்ளது. மேலும், ஜல் சக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை, மத்திய வர்த்தக துறை கூடுதல் பொது இயக்குனரும், ஜல் சக்தி அபியான் இயக்க தேசிய நோடல் அதிகாரியுமான ராஜலட்சுமி தேவராஜன் நேற்று ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், பி.டி.ஓ., முத்துராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.
ஊராட்சி தலைவர் சந்திரசேகர், குட்டை பராமரிப்பு பணிகள், ஜல் சக்தி திட்ட பணிகள் குறித்து விளக்கினார். மரக்கன்று நடவு செய்த அதிகாரி, தொடர்ந்து சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும், திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேட்டறிந்த அவர், அவற்றை தீர்க்கும் வழிகள் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். இதேபோல், அரசூர் ஊராட்சியில் மழை நீர் சேகரிப்பு, தானியங்கி கேட் வால்வு மூலம் தண்ணீர் சப்ளை, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு குழிகள், பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, மத்திய அரசு அதிகாரி குழுவினர் ஆய்வு செய்தனர். பள்ளி மாணவ, மாணவியரிடத்தில் தண்ணீர் சிக்கனம் குறித்து அவர் பேசினார். ஊராட்சி தலைவர் மனோன்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.