/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமையில் காபிக்காடு: முகாமிட்டுள்ள விலங்குகள் பார்வையிட்டு செல்லும் சுற்றுலா பயணிகள்
/
பசுமையில் காபிக்காடு: முகாமிட்டுள்ள விலங்குகள் பார்வையிட்டு செல்லும் சுற்றுலா பயணிகள்
பசுமையில் காபிக்காடு: முகாமிட்டுள்ள விலங்குகள் பார்வையிட்டு செல்லும் சுற்றுலா பயணிகள்
பசுமையில் காபிக்காடு: முகாமிட்டுள்ள விலங்குகள் பார்வையிட்டு செல்லும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 19, 2024 01:50 AM

பந்தலுார்;நீலகிரி மாவட்டத்தில், பசுமையாக காட்சி தர வேண்டிய முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலுார் வனக்கோட்டம் கோடை வெயிலில் காய்ந்து கருகி காணப்படுகிறது.
ஒரு பக்கம் வறட்சி; மறுபக்கம் காட்டுத் தீ என வனத்தின் இயற்கை காட்சிகள் மாறி, பசுமைக்கு பதில் காய்ந்த இலைகள் உதிர்ந்த மரங்கள், கருகிப்போன புதர்கள் என இயற்கை முழுமையாக மாறிப்போனது.
இதனால், பசுமையை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கிறது. மேலும் உணவு, தண்ணீரை தேடி வன விலங்குகளும் இடம் பெயர்ந்து வருகின்றன.
பசுமை மாறவில்லை
அதில், பந்தலுார் அருகே கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலையில், சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட காபிக்காடு என்ற இடத்தில் மரங்கள் மற்றும் புதர்கள் பசுமையாக காட்சி தருகிறது.
வன உயிரினங்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் போதிய அளவு இந்த பகுதியில் உள்ளது. இதனால் யானை, காட்டுப்பன்றி, கடமான்கள், மலபார் அணில், கருங்குரங்கு, பறவைகள் என வனவிலங்குகளின் புகலிடமாக மாறி உள்ளது. சாலையோர புதரில் அதிகளவு வனவிலங்குகள் தஞ்சம் அடைந்து உள்ளதை, இந்த வழியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்களும் வனவிலங்குகளை பார்த்து ரசித்துச செல்ல தவறுவதில்லை.
24 மணிநேரம் கண்காணிப்பு
இதனால், வனத்துறையினர், 24 மணி நேரமும் இந்த பகுதியில், முகாமிட்டு வனவிலங்குகளால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'பார்க்கும் இடங்கள் எல்லாம் காய்ந்து காணப்படும் நிலையில், பசுமை மற்றும் குளிர்ச்சியாக காணப்படும் காபிகாடு வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் சொர்க்க பூமியாக மாறி உள்ளது.
இந்த வனப்பகுதியால், இங்குள்ள கிராமங்களில் தற்போதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இந்த வனப்பகுதியை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

