/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
/
மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
ADDED : மே 03, 2024 11:59 PM

கூடலுார்:மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், காலநிலை மாற்றம் காரணமாக நடப்பு ஆண்டு, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வறட்சியில் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்துள்ளது.
தொடரும், வறட்சியில் நிலத்தடி நீர் குறைந்து பொதுமக்கள் தண்ணீருக்கு சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில், மக்கள் மற்றும் வனவிலங்குகள் குடிநீருக்கு தொடர்ந்து சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், வெப்பம் தணிந்து வறட்சியை போக்கி, மழை பெய்ய வேண்டி மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ நாராயணா சேவை மையம் சார்பில், நேற்று கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டனா ஸ்ரீ சங்கரா பரமனந்தா அறக்கட்டளை ஆதிசங்கர மடத்தை சேர்ந்த சுவாமி ஸ்ரீ கணேஷ்வருனந்த கிரி தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
கூட்டத்தில், கூடலுார் நம்பாலகோட்டை சிவன் கோவில் கிரிவல குழு தலைவர் நடராஜ், சேவை மைய நிர்வாகி சபரீசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.