/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனசாட்சிப்படி வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி
/
மனசாட்சிப்படி வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 28, 2024 05:32 AM

மேட்டுப்பாளையம், : வருகிற லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டு போடுவது குறித்து, விழிப்புணர்வு நாடகம், பேரணி, சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
தமிழகத்தில் ஏப்ரல், 19ம் தேதி, ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை, அரசு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
சிறுமுகை பேரூராட்சி தியேட்டர் மேடு பகுதியில், விழிப்புணர்வு நாடகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், பொது மக்களுக்கு, 100 சதவீதம் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூராட்சி ஊழியர்கள் கையில் 'வாக்குரிமை எனது நாட்டுரிமை' 'மனசாட்சிப்படி வாக்களிப்போம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கையில் வைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியை பார்த்த பொது மக்களுக்கு, தேர்தல் விழிப்புணர்வு குறித்த, துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் முன்னிலையில், நகராட்சி பணியாளர்கள், தொழிலாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
காட்டூர் ரயில்வே கேட் அருகே துவங்கிய பேரணி, வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை வழியாக,நெல்லித்துறை ரயில்வே கேட் வரை சென்றது. இதில் அனைவரும் வாக்களிப்போம் என்ற பதாகைகளை, பணியாளர்கள் கையில் ஏந்தி வந்தனர். வழியில் உள்ள கடைகள், வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கியும், ஸ்டிக்கர்களை ஒட்டியும் வந்தனர்.