தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கட்டட கழிவுகள்
தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கட்டட கழிவுகள்
ADDED : ஜூலை 15, 2026 06:52 PM

குன்னுார்: குன்னுார் அருகே, தேசியநெடுஞ்சாலை மற்றும் ஆற்று பகுதியில் கொட்டும் மண் மற்றும் கட்டட கழிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
குன்னுார்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், எரியூட்டு மையம், சுடுகாடு அருகே உள்ள ஆற்றோர பகுதிகளில், விதிகளை மீறி, கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டு, இரும்பு கம்பிகள் வீசப்பட்டுள்ளன. சாலையோரம் மலைபோல் குவிந்துள்ள இந்த கட்டுமான கழிவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தன்னார்வலர் முபாரக் கூறுகையில்,‘‘குன்னுார்– ஊட்டி சாலையோரம் இரும்பு கம்பிகளுடன் கூடிய கட்டட கழிவுகளை கொட்டுவதால் விபத்து அபாயம் உள்ளது. கீழ் பகுதியில் உள்ள ஆற்று நீர் மாசுபடுவதோடு, இந்த தண்ணீரை அருந்தும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றுவதுடன், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றார்.
