/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
90 ஹெக்டர் நிலப்பரப்பில் முள் மரங்கள் அழிப்பு
/
90 ஹெக்டர் நிலப்பரப்பில் முள் மரங்கள் அழிப்பு
ADDED : ஏப் 23, 2024 10:28 PM

மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதிகள், 11 ஆயிரத்து, 683 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் குஞ்சப்பனை, ஓடந்துறை, பெத்திக்குட்டை ஆகிய காப்புக்காடுகள் உள்ளன. வனப்பகுதிகளில் உள்ள மலைப்பகுதி அல்லாது நிலப்பகுதிகளில், அதிகளவில் முள் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை சிறுமுகை வனத்துறையினர், வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது: சிறுமுகை வனச்சரகத்தில் அன்னிய களைச் செடிகள் அழிப்பு திட்டத்தில், முள் மரங்களும், உன்னி செடிகளும், வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த வனப்பகுதியில், 45 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள முள் மரங்களையும், 45 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள உன்னி செடிகளையும், என மொத்தம், 90 ஹெக்டர் நிலப்பரப்பில் வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோராயமாக,700 டன் அளவுக்கு முள் மரங்கள் வெட்டப்பட உள்ளன.
முள் மரங்கள் வெட்டிய இடங்களில், விறகுகளை அளவீடு செய்வதற்கு தகுந்தாற் போல், அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டிய இடங்களில், புதிதாக மரக்கன்றுகள், உள்ளூர் செடிகள் நடப்படும். லிங்காபுரம் வனப்பகுதியில் முள் மரங்கள் வெட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
தற்போது பெத்திக்குட்டை காப்புக்காடு பகுதியில், முள் மரங்கள் வெட்டும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து முள் மரங்களும் வெட்டியபின், அதை ஏலம் விட, மாவட்ட வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு வனச்சரக அலுவலர் கூறினார்.

