/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதையில் பஸ்சை ஓட்டிய ஓட்டுனர், நடத்துனர் 'சஸ்பெண்ட்'
/
போதையில் பஸ்சை ஓட்டிய ஓட்டுனர், நடத்துனர் 'சஸ்பெண்ட்'
போதையில் பஸ்சை ஓட்டிய ஓட்டுனர், நடத்துனர் 'சஸ்பெண்ட்'
போதையில் பஸ்சை ஓட்டிய ஓட்டுனர், நடத்துனர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 08, 2024 01:04 AM
அவிநாசி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து திருச்சி அருகே துறையூருக்கு நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் ராஜ்குமார் பஸ்சை ஓட்டினார். இரவு, 10:30 மணிக்கு, அவிநாசி அருகேயுள்ள கருவலுாரில், தாறுமாறாகவும், அதிவேகமாகவும் பஸ் இயக்கப்பட்டது.
பதறிய பயணியர் பஸ்சை நிறுத்துமாறு, ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ் நின்றவுடன், பயணியர் அவரை சிறைப்பிடித்து, குடிபோதையில் இருந்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, அவிநாசி போலீசார் கருவலுாருக்கு சென்று பயணியர் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களிடம் பேசினர். நான்கு மணி நேரத்துக்கு பின், மாற்று ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு பஸ் இயக்கப்பட்டது. போதையில் இருந்ததாக கூறப்படும், ராஜ்குமாரிடம் போலீசார் விசாரித்தனர்.
மணிகண்டன் என்ற பயணி கூறியதாவது:
ஊட்டியில் புறப்பட்டதிலிருந்தே டிரைவர் அதிக வேகத்தில் பஸ்சை ஓட்டினார். அன்னுார் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு அருகில், டிரைவர் மற்றும் கண்டக்டர் சாப்பிட பஸ்சை நிறுத்தி எடுத்தனர். அதன் பிறகே, மிக மோசமான நிலையில் பஸ் இயக்கியதால், சந்தேகம் அடைந்து நிறுத்தினோம்.
அப்போது டிரைவர் ராஜ்குமார், நல்ல போதையில் இருந்தார். தகவல் கேள்விப்பட்டு வந்த போலீசார், டிரைவரை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தனர். நாங்கள் கடும் வாக்குவாதம் செய்த பிறகே, மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை பொது மேலாளர் கணபதி கூறுகையில், ''சம்பந்தப்பட்ட பஸ் ஓட்டுனர் ராஜ்குமார் மற்றும் கண்டக்டர் பிரகாஷ் இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல்களில் சாப்பிட பஸ் நிறுத்தியதற்கும், குடிபோதையில் பஸ் ஓட்டியதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

